Tuesday, February 7, 2012

அனைத்து மதங்களும் நன்மையையே போதிக்கும் போது... ஏன் இஸ்லாத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்?


மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்: உலகில் உள்ள எல்லா மதங்களும் – நல்லதையே செய்ய வேண்டும் – நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது – ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!


பதில்:
1. இஸ்லாமிய மார்க்கத்திற்கும் – பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:

எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் – நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையேச் செய்ய வேண்டும் – நல்லதையேப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் – தனிமனிதனிடமும் – முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம். நன்மையை ஏவி – தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் – தீனுல் ஃபித்ர் – அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

2. உதாரணம்: மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.

அ. இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.

எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் – நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.

ஆ. இஸ்லாம் ‘ஜக்காத்’ என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.

இஸ்லாம் ‘ஜக்காத்’ என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு ‘ஜக்காத்’ என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.

இ. திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.

திருடினான் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:
‘திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.’ (அல்-குர்ஆன் 5 : 38)
‘ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா?. இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்’! என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்

ஈ. இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் – சரியான பலன் கிடைத்திருக்கும்:

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது. அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.

இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். – ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான். திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே – திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.

3. மூன்றாவது உதாரணம்: இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.

அ. வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?. பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.

ஆ. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் – நடை முறையும்.

இஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் ‘(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)
ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் – வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் – அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இ. பெண்களுக்குரிய ‘ஹிஜாப்’

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் ‘(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…..ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
ஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

ஈ. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.
பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் – அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் – ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

உ. இரட்டை சகோதரிகள் – ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் – இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் – மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் – கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது – ஆண்பாலரை கேலியும் கிண்டலும் – தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஊ. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் – அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத – காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ – அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு – தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் – வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் – யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு – வல்லுறவு கொண்டு விட்டால் – மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் – வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ – அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு – வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

எ. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது. நடந்த வல்லுறவு குற்றங்களில்; 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.

அதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 ஒ 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது. மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான். மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.

இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும். முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள்!. ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.

ஏ. இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:

அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் – அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி – மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் – அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் – அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.

4. மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்;வுகளை கொண்டுள்ளது.

இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா (நன்றி)

No comments: